அம்மான்னா சும்மாவா?

Friday, November 24, 2006

கருணாநிதி அரசை நீக்க வேண்டும்

பாரதம் ஒற்றுமைக்கு புகழ் பெற்ற நாடு. இங்கு உள்ள மக்கள் அனைவரும் சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் சொல்லியபடி அவரவர் கடமைகளை செய்து கொண்டு வருபவர். ஜாதி, மத வித்தியாசங்கள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர். அதை கண்டு பொறுக்க முடியாத கிருத்துவ மெஷினரிகள் நம்மிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று ஒரு வெடியை கொளுத்தி போட்டு விட்டனர். அப்பாவி மக்களும் அதை நம்பி கோவில போன்ற சில இடங்களில் வேற்றுமையை காட்டி வருகின்றனர். அது காலப்போக்கில் மறைந்து நாம் அனைவரும் ஒன்றே என்று கூடி மகிழும் காலம் விரைவில் வரும்.

பாரதம் அரசாட்சி முறைகளுக்காக பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநில மக்களும் பாரதத்தாயின் குழந்தைகளே. அதைதான் நம் முன்னோர் அடிக்கடி கூறி வந்தனர். இப்படி பல உடல் ஓர் உயிராக வாழ்ந்து வரும் மக்களிடையே கலவரத்தை உருவாக்குகிறான் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி. கேரள மாநில மக்கள் 100% படித்த மக்கள். அவர்களின் மதிப்பு படிக்காத திம்மிக்கு எப்படி புரியும். கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை மறிக்கின்றனர் திம்மியின் வானரங்கள்.

இது எப்படி முறையாகும். பாரதத்தின் ஒரு பகுதியில் இருந்து வண்டியில் வேறு பகுதிக்கு செல்ல முடியவில்லை. இது சரியா?. தேசப்பற்று உள்ளோர் இதை கடுமையாக எதிர்க்கவேண்டும். இந்த மறியல்களின் மூலம் கிருத்துவ மெஷினரிகளின் மனத்தை குளிர்விக்க என்னுகிறார் மஞ்சள் துண்டார். என்னடா கிருத்துவ மெஷினரிகள் இதில் எங்கே வந்தனர் என்று நினைக்கின்றீர்களா. தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும். சமீபத்தில் சாஸ்தாவின் புகழ் உலகமெங்கும் பரவி வருகின்றது. அதை அப்படியே விட்டால் ஆல்ப்ஸ் மலையிலும் 18 படி வந்து விடும் என வாடிகன் நம்புகிறது. அன்டோனியோ மெய்னோவின் ஆசியுடன் மெஷினரிகள் ஜெயமாலா என்ற நடிகையை தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். அது மக்களிடையே எடுபடாத காரணத்தினால் தமிழக திம்மி மூலம் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை தடுக்க இப்படி ஒர் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

பாரத ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் இந்துக்களை அவர்கள் விரும்பும் ஆலயத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கும் இந்த மைனாரிட்டி ஆட்சியை 356ஆது விதியின் கீழ் ஆட்சி பொறுப்பில் இருந்து நீக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு போராடுவோம். திம்மியின் பிடியில் இருந்து பாரத மாதாவை காப்பாற்றுவோம்.

வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
அனைவரும் வந்தே மாதரம் எனும் மந்திரத்தை 108 முறை ஓங்கி ஒலிப்போம்.

பாரத ஒற்றுமை ஓங்குக. வாழ்க பாரதம். வீழ்க திம்மி.

Tuesday, November 21, 2006

கொடுஞ்செயல்

பாரத தேசத்தின் பாரம்பரியத்தினை அடியோடு அழிக்க கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ராம ராஜ்ஜியத்தினை ரோம ராஜ்ஜியமாக மாற்ற வாடிகன் உத்தரவின் படி அன்டோனியோ மெய்னோ செயல்பட்டு வருகின்றார். நம் முன்னோர் செய்த பாவ காரியங்களின் பலனாக தமிழகமும் இப்போது திம்மியின் பிடியில் இருக்கின்றது. திம்மி ஆட்சியில் இருப்பதால் தமிழகத்தில் ஆங்காங்கே மதமாற்ற சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு இந்து கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

மனிதனை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்த கூட்டம், கோயிலையும் வளைக்க ஆரம்பித்துவிட்டது. நெல்லையப்பர் கோயில் உலக பிரசத்தி பெற்றது. நெல்லையப்பர் கோயிலை மொத்தமாக வளைத்து சூசையப்பர் தேவாலயம் அமைக்க வாடிகன் முடிவு செய்துவிட்டது. அதன் தொடக்கமாக சிலரை இங்கு அனுப்பி கோயிலை எப்படி தேவாலயமாக மாற்றலாம் என ஆராய்ந்து உள்ளது. அதை கீழே உள்ள படத்தினில் காணலாம். அது மட்டும் அல்லாமல் கோயில் யானையையும் மதம் மாற்ற ஆரம்பகட்ட முயற்சிகள் நடை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.


செய்தி அறிந்ததும் தேச பற்றையும், இந்து மதத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் கோயிலுக்கு விரைந்து இந்த கொடுஞ்செயலை தடுக்க முற்பட்டனர். ஆனால் கருணாநிதியின் நேரடி உத்தரவின்படி போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி படுகாயப்படுத்தி விட்டனர். பொது மக்கள் கையாலாகாத மைனாரிட்டி அரசு மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். தென் தமிழகம் பதற்ற நிலையில் உள்ளது. பதற்றத்தை தணிக்க மூத்த பத்திரிக்கையாளரான பெரியவர் மலர்மன்னன் அங்கு விரைந்துள்ளார். அவர் வருகையால் பதற்றம் குறைந்து அமைதி விரைவில் திரும்பும் என நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.இதுபோன்ற இந்து விரோத செயல்களை தொடர்ந்து செய்யும் மத்திய, மாநில அரசுகளை ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்றுபட்டு போராடுவோம். அனைவரும் எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து பொது மக்களுக்கு இதை பற்றி தெளிவுபடுத்துவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Sunday, November 19, 2006

well done கலாநிதி

பாரதத்தின் செல்வந்தர்களை பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அதில் 20ஆவது இடத்தினை பிடித்திருப்பவர் கலாநிதி ஆகும். அவரின் சொத்து மதிப்பு சுமார் 1.9 பில்லியன் என மதிப்பிட படுகிறது. என்னடா இலைக்காரன் கலாநிதியை வாழ்த்துகின்றானே என நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என சி.என்.அண்ணாதுரை சொல்லியுள்ளார். சிற்றிலையான எனக்கு தோன்றிய சில காரணங்களை பார்ப்போம்.

முதலில் அவர் ஒர் இந்து. எனவே 80 கோடி இந்துக்களும் இந்த செய்தியில் நிச்சயம் பெருமை பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் நமது சமயத்திற்கு அரும் பாடுபடும் ஒர் இளைஞர் அவர். திருப்பதி முதல் சபரிமலை வரை அனைத்து கோயில் திருவிழாக்களையும் நேரடியாக ஒளிபரப்பி உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களுக்கு தெய்வ தரிசனத்தை அவர்கள் வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஒரு உன்னதமான மனிதர் அவர். மேலும் அவரின் தொலைக்காட்சியில் இந்து சமயத்தினை போற்றும் பல நல்ல, பயனுள்ள தொடர்களை ஒளிபரப்பி வருகின்றார். உதாரணமாக வேலன், வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி போன்ற தொடர்களை சொல்லலாம். இப்படியான தொடர்கள் மூலம் நம் மதம் உலகம் முழுவதும் பல்கி பெருகும்.

அடுத்ததாக அவர் ஆற்றும் பெரும் பணி நமது பாரம்பரியத்தின் அருமை பெருமைகளை எடுத்து உரைப்பதாகும். சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் மக்களுக்கு பயன்படும் பல நல்ல குறிப்புகள் உள்ளன. அவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு புனித காரியத்தினை அவர் செய்து வருகின்றார். உதாரணமாக அது மட்டும் ரகசியம், சிவமயம் போன்ற தொடர்களை சொல்லலாம். ரசவாதம், மூலிகைகள், மூச்சடைப்பு, தியானம் போன்ற நற் கலைகள் மக்களிடையே பரவி வருகின்றது ஒரு நல்ல செய்தியே. நமது பாரம்பரிய சர்வ நோய் நிவாரணியான திருநீரானது அவர் வெளியிடும் பல தொடர்களில் பல்வகையான நோய்களை தீர்த்து இருப்பதை கண்கூடாக பார்த்து இருக்கின்றேன்.

பெண்களை பெருமை படுத்தும் பல நல்ல கதாபாத்திரங்கள் அவரின் தொலைக்காட்சியில் பவனி வருவர். சூர்ப்பனகை, கூனி, கைகேயி போன்ற நம் முன்னோர்களின் குண நலன்களை அடிக்கடி காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் ஒர் அரிய செயலை அவர் செய்து வருகின்றார். இது போன்ற கதாபாத்திரங்கள் நம் இளையோரின் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டிய ஒன்றாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் விட நான் முக்கியமாக கருதுவது அவரின் தமிழ் மொழி பற்றுத்தான். தமிழ் மொழியின் பழக்கம் நம்மிடையே அழிந்து வரும் இக்காலத்தில் சன் ம்யுசிக், சூரியன் எப்.எம் போன்ற தலை சிறந்த நிறுவனங்கள் மூலம் தமிழை வாழ வைக்கின்றார். நக்கீரரும், திருஞானசம்பந்தரும் பாடி வளர்த்த நல்ல தமிழை நம்மிடையே அழியாமல் காப்பாற்றுபவர் அவரே.

எனவே அவருக்கு வலைபதிவர்கள் சார்பாக "ஆன்மீக பெரியார்" என்னும் பட்டத்தினை அளிக்கலாம் என நினைக்கின்றேன். அடுத்த சென்னை வலைபதிவர் கூட்டத்தில் இந்த கருத்தினை முன் மொழிய எண்ணியுள்ளேன்.

வாழ்க கலாநிதி. வளர்க அவர் செல்வம்.

Friday, November 17, 2006

சபாஷ் தினமலர் சபாஷ்

பாரதத்தினை காக்கும் நான்கு தூண்களில் முக்கியமானது ஊடகங்கள் ஆகும். நாட்டின் கவசமாக விளங்கும் முக்கிய ஊடகம் தினமலர். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். இந்த நாளேடு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலோடு நடை போட்டு வரும் ஒரு நிறுவனம். எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது. நாட்டில் நடக்கும் பயங்கரத்தினை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு சர்ச் லைட்டாக இந்த நாளேடு விளங்குகின்றது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் கலவரத்தின் மூலம் ஆட்சி பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் தமிழகத்தில் வன்முறை பல்கி பெருகி ஆறாக ஓடுகின்றது. உலகின் பல பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஆயுத சப்ளை நடைபெறுகின்றது. சமீபத்தில் ஆந்திராவில் பிடிபட்ட ராக்கெட் குண்டுகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அதே போல அல்கொயிதாவிற்கும் ஆயுதங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக அமெரிக்க உளவு ஸ்தாபனம் ஒன்று சந்தேகப்படுகின்றது.

ஆந்திராவில் நக்ஸல்களுக்கு தொல்லை ஏற்பட்டால் அவர்கள் தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவர். அம்மாவின் ஆட்சி நடைபெற்றால் ஆந்திராவிலேயே தங்கி விடுவர். திம்மியின் மைனாரிட்டி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை பற்றி அவர் கவலைபடுவதில்லை. எனவே நக்ஸல்கள் மாமியார் வீட்டிற்கு ஜம்பமாக வருவது போல் தங்கள் இஷ்டத்திற்கு வந்து போவர். அப்படி திருட்டுத்தன்மாக உள்ளே நுழையும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு காட்டிக்கொடுப்பது தினமலர் போன்ற தேசபக்தி உள்ள ஸ்தாபனங்களே.


ஆந்திராவை ஒட்டிய மேட்டூர் மலையில் நக்ஸல்கள் கூடாரம் அடித்து தங்கியுள்ளதை படத்தோடு வெளியிட்டது தினமலர். மலையில் 600 மீட்டர் உயரத்தில் தீவிரவாதிகள் டெண்ட் அமைத்துள்ளதை வெளியிட்டது தினமலர். மேலும் பயங்கரவாதிகள் 3000 சதுர அடி நிலத்தினை சமப்படுத்தி ஆயுத பயிற்சியில் ஈடுபட போவதாக எச்சரித்தது. செய்திதாளை வாங்கி படித்ததும் இனிமேல் சும்மா இருக்க முடியாது என்று திம்மி டம்மி போலீஸிடம் சொல்ல, அவர்களோ அங்கே இருப்பவர்கள் கிழங்கு பொறுக்க வந்தவர் என்று கதை விடுகின்றது. இவர்களிடம் சிக்கி பாரதமாதா சித்திரவதை படலாமா? சிந்திப்பீர் இந்தியர்களே. 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு இந்த திம்மியை ஆட்சியை விட்டு விரட்டுவோம்.


கோடி கொடுத்தாலும் தோடி பாடாத இசைஞானி வாழ்க.

Tuesday, November 07, 2006

அராஜகம் தொடர்கின்றது

இந்த உலகை காக்கும் ஒரே மதம் இந்து மதமாகும். இந்து மதம் தழைத்து இருப்பதால்தான் பாரதம் நாள்தோறும் வலிமை பெற்று வருகின்றது. நம்முடைய வேதங்களும், சாஸ்திரங்களும், பக்தியும் இல்லையெனில் பாரதம் ஆப்பிரிக்க நாடுகள் போல கற்காலத்திற்கு சென்று விடும். இதனை உணர்ந்துதான் இறைவன் மனித அவதாரம் எடுத்து வந்து நம்மிடையே நல்ல பழக்க வழக்கங்களை விட்டு செல்கின்றார். இவ்வாறாக பாரதத்தில் அவதரித்த ஒரு மகான் நம் வள்ளலார் ஆகும். இந்து மதத்தினை பாரதத்தில் பரப்பியவர்களில் அவர் முக்கிய பங்கு வகிக்கின்றார். நாள் தோறும் ஈசனுக்கும், கணபதிக்கும் பூசை செய்யாமல் அவர் இருந்ததே கிடையாது.

பாரத புதல்வர்களின் பாவச் செயலால் தமிழகத்தில் திம்மியின் மைனாரிட்டி ஆட்சி வந்துவிட்டது. ஆட்சி பொறுப்பில் அமர்ந்தவுடன் வழக்கம்போல இந்து மத விரோத செயல்களில் இறங்கிவிட்டது. இப்போது இந்து மதத்தின் முக்கிய தூணாக விளங்கிய வள்ளலாரின் இடத்தில் உருவ வழிபாடு நடத்த தடை விதித்து விட்டது. உருவ வழிபாட்டினை எதிர்க்கும் ஒரே ஜீவராசிகள் முகமதியர்கள் ஆவார்கள். அவர்கள் போடும் ஓட்டிற்காக திம்மி அரசாங்கம் நம் மதத்தினை அழிக்க துடிக்கின்றது.

இந்து மகான் வள்ளலார் ஈசனோடு இரண்டர கலந்து விட்டவர். அப்படிப்பட்டவரின் இடத்தில் சிவலிங்க வழிபாடு நடத்தக்கூடாதாம். என்ன வேதனை. பாரதத்தில் இந்து மகான் ஒருவருக்கு பூசைகள் செய்ய முடியவில்லை. 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அங்குதான் நமக்கு சரியான நீதி கிடைக்கும்.

வாழ்க வள்ளலார். வெல்க இந்து மதம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za